Monday, August 29, 2005

தென்னைமர பூச்சிகளுக்கு பிரமோன்(Pheromone) பொறி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை மரங்கள் முக்கியமானவையாகும். அவற்றைத் தாக்கும் முக்கிய பூச்சிகள் காண்டாமிருக வண்டும், சிவப்பு வீவில் பூச்சியுமாகும். அண்மையில் இவை கோழிக்கோட்டுப்பொத்தையில் திரு.மாணிக்கவாசகம் எனும் விவசாயியின் தென்னந்தோப்பில் கண்டறியப்பட்டன. நன்றாக வளர்ந்த தென்னை மரங்கள் இறப்பதைக் கண்ட திரு.மாணிக்கவாசகம் எங்களை ஒருமுறை அவரது தென்னந்தோப்பினை வந்து காணும்படி கூறினார். அதன்படி அவரது தென்னந்தோப்பினை பார்வையிட்ட நாங்கள் மூன்று மரங்கள் கடுமையாக பூச்சிகளால் தாக்கப்பட்டிருப்பதைக் கூறினோம். மேலும் இது பரவாமல் தடுக்க பிரமோன் பொறி ஒன்றினை கட்டினோம். ஒரு மூடி கொண்ட பக்கெட்டில் பக்கவாட்டில் வட்டவடிவ ஓட்டைகள் போட்டி மூடியின் உட்பாகத்தில் பெரமோனைக்கட்டி பக்கெட்டினுள் அழுகிய பழங்கள், பழ எச்சங்கள், அன்னாசி பழத்தோல்கள் அத்துடன் சிறிதே ஈஸ்ட்டும் சேர்க்கப்பட்டு இந்த பக்கெட் தொங்கவிடப்பட்டது. இதன் செயலாக்கம் இரண்டு ஏக்கருக்கு இருக்கும். அடுத்தநாளே பத்துக்கும் மேற்பட்ட சிவப்பு வீவில் பூச்சிகள் (Red palm weevil) கிடைக்கப்பெற்றன.

கீழே காணும் படங்கள்:
1. தாக்கப்பட்ட தென்னை மரங்கள்2.தென்னம் இலை அடியில் துளையிடப்பட்டுள்ளது

இந்த பூச்சியைப்பொறுத்தவரையில் அது தென்னைக்கு முக்கியமாக தீங்கு விளைவிக்கும் காலம் அதன் லார்வாக் காலம்தான். பெண்பூச்சி சற்றேறக்குறைய 200 முட்டைகளை இளம் தென்னம் இலைகளின் அடிப்பாகத்தில் போட்டுவிடுகின்றன. அவை லார்வா ஆனதும் (நீளம் 5 செமீ) கூட்டுப்புழு பருவம் அடையும் முன் மென்மையான பாகங்களையும் மரத்தில் ஏற்கனவே துளை விழுந்த பாகங்களையும் அரித்தபடி உட்பகுதிகளை தின்றபடி உள்ளே சென்று விடுகின்றன. பின்னர் எறும்புகள் போன்ற இன்னபிற பூச்சிகளும் உள்ளே செல்ல வழிவகுக்கின்றன. மேல் இலையில் தொடங்குகிற இந்த அழிவு மரத்தின் அடிப்பாகம் வரைக்கும் உள்ளேயே அரித்தெடுத்துவிடுகின்றன.

3.இப்பூச்சியின் வாழ்க்கை காலம்:

 • முட்டைகளிலிருந்து லார்வா - 2-5 நாட்கள்

 • லார்வா வளர்ச்சியடையும் பருவம்- 1-3 மாதங்கள் வரை வேறுபட்ட நிலைகளில் இருக்கும் இப்பருவமே தென்னைமரத்திற்கு இவை அதிக கேடு செய்யும் காலமாகும்.

 • கூட்டுப்புழுக்காலம் - 14-21 நாட்கள்

 • நான்குமாதச்சுழலில் வளர்ந்த பூச்சிகள் வெளிவரும்
இப்பூச்சியின் விலங்கியல் வகைப்படுத்தல்:
 • Order: Coleoptera
 • Family: Curculionidae
 • Zoological name: Rhynchophorus ferrugineus (Olivier)
 • Common name: Red Palm Weevil and/or Asian Palm Weevil and Indian palm weevil.மேலும் சில படங்கள்:
 • தென்னையின் அழிக்கப்பட்ட அடிப்பாகம் • வாளியின் மூடியின் அடியில் பெரமோன் சிமிழ் (அதனை மூடியிருக்கும் பிளாஸ்டிக் பையை அப்புறப்படுத்தக்கூடாது) • பக்கவாட்டில் வட்ட ஓட்டைகள் கொண்ட வாளியில் பழம்-ஈஸ்ட் கரைசல் • பெரமோன் பொறி கட்டப்படுகிறது • இருநாட்களுக்கு பின்னர் சிவப்பு வீவில் வண்டுகள் அதில் காணப்படுகின்றன.

2 comments:

Sri Rangan said...

நீலகண்டன்,வணக்கம்.நல்ல முயற்சி.பாராட்டத்தக்க செயற்பாடிது.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி ஸ்ரீ ரங்கன். அடிக்கடி வாருங்கள். உங்களுக்கு தெரிந்த விவசாயிகளுக்கு அல்லது தன்னார்வ களப்பணியாருக்கு சொல்லுங்கள். அவர்களையும் இதில் பின்னோட்டங்கள் இட சொல்லுங்கள் அவர்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள சொல்லுங்கள். குவித்தன்மையற்ற வளங்குன்றா வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்கள் குறித்து நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.