Friday, January 26, 2007

சந்திரனின் வடுக்கள் சொல்லும் கதை

தினம் ஒரு அறிவியல் தகவல்:-1


சந்திரனின் பரப்பினை வரையுங்கள் என்றால் நமது மனதில் முதலில் வருவது அதன் வட்ட வட்ட பள்ளங்கள் கொண்ட நிலபரப்புதான். இந்த வட்ட வட்ட குழிகள்/பள்ளங்கள் எல்லாம்
விண்கல் தாக்குதலால் ஏற்பட்ட வடுக்கள். என்றால் நிலவினை விட பெரியதும் அதற்கு அருகிலேயே இருப்பதுமான பூமியின் மேல் ஏன் இத்தகைய வடுக்கள் இத்தனை அதிகமாக
காணப்படவில்லை? இருப்பதில் தெளிவான அத்தகைய விண்கல் வடு (crater) அரிஸோனாவில் உள்ளது. மிகவும் அரிதாக தெரியக்கூடியது என்பதால் அது ஒரு சர்வதேச சுற்றுலா அம்சமாகவே மாறிவிட்டது. ஒருவேளை பூமி ஏதாவது சக்தியால் காப்பாற்றப்பட்டுள்ளதோ? அப்படியெல்லாம் இல்லை. பூமியும் நிலவினைப் போலவே -ஏன் அதற்கு அதிகமாகக்கூட - விண்கற்களால் தாக்கப்படத்தான் செய்தது. (தாக்கப்படவும் செய்யும் - இனி வருங்காலத்தில்) ஆனால் பூமி அதன் சுற்றுக்கோளான சந்திரனை போல் அல்லாமல் நிலவியல் இயக்கங்கள் அதிகமாக உள்ள கிரகமாகும். இதன் விளைவாக விண்கற்களால் பூமியின் மேல்பரப்பில் ஏற்பட்ட வடுக்கள் நாளாவட்டத்தில் உருமாறி போய்விட்டன. என்ற போதிலும் நிலவியல் விஞ்ஞானிகள் (geologists) இதுவரை 170 கிரேட்டர்களை கண்டுப்பிடித்திருக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் பூமியில் விண்கல் மோதல் ஏற்படுத்தும் விளைவுகளின் தடயங்கள் அழிந்துவிட்டன. ஆனால் சந்திரனைப் பொறுத்தவரை அந்த விளைவுகளின் தடயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு நாஸா, இஸ்ரோ ஆகியவை தம் விண்வெளி ஆய்வின் பார்வையை சந்திரன் நோக்கி திருப்பியிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.


அப்பல்லோ-11 எடுத்த சந்திர நிலப்பரப்பில் விண்கல் மோதலால் விளைந்த வடுக்கள் -Craters: நன்றி-நாஸா

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரகங்களை ஆராயும் விஞ்ஞானி பால் ஸ்பூடிஸ் (Paul Spudis) விளக்குகிறார், "பூமியும் சந்திரனும் சூரிய குடும்பத்தில் ஏறத்தாழ
ஒரே இடத்தை வகிப்பவை ஆகும். ஆனால் பூமியில் மறைந்து போன தடயங்கள் சந்திரனில் நிலைத்து உறைந்திருக்கும். இதனால் நெடுங்கால புவியியல் வரலாற்றின் கேள்விகள்
சிலவற்றுக்கு அவை விடை பகரக் கூடும். பூமியில் நிகழ்ந்த தொல் நிகழ்வுகளுக்கு ஒரு சாட்சியாகவே சந்திரன் விளங்குகிறது."



அப்பல்லோ-16 விண்வெளி வீரர் சார்லி ட்யூக் சந்திர பரப்பில் துளையிட்டு பாறைத்துகள்கள் சேகரிக்கும் காட்சி : நன்றி நாஸா

1970களில் பல சந்திர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்பல்லோ மிஷன்கள் 15, 16 மற்றும் 17 ஆகியவற்றில் சந்திரனின் உடைந்த பாறை சிதறல்களாலான பகுதிகளில் (அதனை
ரிகோலித்-regolith என்பார்கள்) துளையிட்டு அந்த துகள்கள் எடுக்கப்பட்டன. 2 மீட்டர் ஆழம் கொண்ட துளைகளிலிருந்து சேமிக்கப்பட்ட அந்த சந்திர துகள்களில் மிகவும்
ஆழத்திலிருந்து எடுக்கப்பட்டவை 2 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. பொதுவாக ரிகோலித் துகள்களில் சூரிய வீச்சின் (solar wind) தன்மைகள் பதிவாகியிருக்கும்.
மிகப்பழமையான ரிகோலித் துகள்கள் ஆராயப்பட்ட போது ஆதவ வீச்சின் தன்மை கூட 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இன்றிருப்பதைக் காட்டிலும் மாறுபட்டிருப்பது
தெரியவந்தது. ஆக, பூமியின் தொல்வரலாறு மட்டுமல்ல விண்மீன்களின் வளர்ச்சியின் தன்மையையும் இத்துகள்களை ஆராய்வது நமக்கு கோடிட்டு காட்டக்கூடும்.

டைனோஸார் அழிவின் மர்மத்திற்கு சந்திர ஆராய்ச்சியால் விடை கிடைக்குமா?

புவியியலார்களுக்கு நிலவின் துகள் ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான ஈடுபாடு உண்டு. அது டைனோசார்களை அழித்ததாக கூறப்படும் விண்கல் மோதலின் பதிவுகள் சந்திரனிலும் இருக்கக் கூடுமா என்பது. சில அறிவியல் வல்லுநர்கள் ஒரு சிலிர்ப்பூட்டும் கோட்பாட்டினை முன்வைக்கிறார்கள். அது : நமது சூரியனுக்கு ஒரு இருள் ஜோடி இருக்கக் கூடும் என்றும் அதன் இயக்கத்தால் 260 இலட்சம் (260,00,000) ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமி (என்றால் அத்துடன் சந்திரனும்) இத்தகைய விண்கல் மோதல்களுக்கு உட்படுத்தப்படக்கூடும்: என்பதுதான் அந்த கருதுகோள். இந்த கருதுகோளின் உண்மையும் நிலாவின் மேல்பரப்பு துகள்களை ஆராய்வதால் உறுதிபடக்கூடும்.


இஸ்ரோவின் சந்திராயன் 2007-8 இல் நடக்க உள்ளது. அதுவும் நிலாவின் நிலப்பரப்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது.


நிலவு சுற்றுப்பாதையில் சென்று நிலவை ஆராயப்போகும் இஸ்ரோ கலம்


  • நன்றி: நாஸா
  • சுட்டி: இங்கே
  • இப்பதிவில் காணப்படும் புகைப்படங்களின் அதிக தெளிவான படங்களை மேல் கூறிய சுட்டியிலிருந்து தகவிறக்கம் செய்து கொள்ளலாம்.

7 comments:

Anonymous said...

நல்ல பதிவு நீலகண்டன். ஆனால் வழக்கம் போல இது கவனிக்கப்படாது. இந்து தெய்வங்களை திட்டி -கெட்டவார்த்தை போட்டு திட்டினால் இன்னமும் நலம்- நட்சத்திர பதிவராகலாம். அல்லது பீங்காவில் இடம் பெறலாம்.

வடுவூர் குமார் said...

வானவியல்
பல வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருந்தாலும்,தொடர்ந்துகொண்டிருக்கிரது.
யாரும் அவ்வளவாக தொடாத விஷயங்களை போடுங்கள் தொடர்ந்து.

வடுவூர் குமார் said...

உங்க உயிர் எரிபொருள் பதிவில் பின்னூட்டம் போட வசதியில்லையே?
கொஞ்சம் பாருங்க.

அரவிந்தன் நீலகண்டன் said...

மன்னித்துக் கொள்ளுங்கள். அது போன வருடம் செய்த பதிவு. அப்போது சில பிரச்சனைகளின் காரணமாக பின்னூட்டத்தை எடுத்துவிட்டு போட்டேன். இப்போதும் அப்படியே இருக்கிறது. ஸெட்டிங் அது இதுவென்று எதை மாற்றினாலும் அப்படியே உள்ளது. இப்போது ப்ளாக்கர் மாறிய போது அந்த இடுகையும் திரட்டியில் வந்துவிட்டது (எப்படி? தெரியவில்லை.) எனவே இனிமேல் உள்ள இடுகைகளில் பின்னூட்டம் இருக்கும். சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்.

மரைக்காயர் said...

நல்ல பதிவு திரு. நீலகண்டன் அவர்களே.

பூமியின் மீது இத்தகைய வடுக்கள் அதிகமாக காணப்படாததற்கு இரண்டு காரணங்களை அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

1. பூமியை சுற்றியிருக்கும் காற்று வளிமண்டலம் பெரும்பாலான விண்கற்களை எரித்து விடுகிறது.

2. நீங்கள் குறிப்பிட்டதுபோல, விண்கற்களால் பூமியின் மேல்பரப்பில் ஏற்பட்ட வடுக்கள் நாளாவட்டத்தில் உருமாறி போய்விட்டன.

என் மகளின் அறிவியல் புத்தகத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது இது.

இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

அரவிந்தன் நீலகண்டன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மரைக்காயர்.

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள மரைக்காயர்,

மிகவும் அதிகமாக விண்கற்கள் புவியையும் நிலவையும் தாக்குகின்றன என்றாலும் நீங்கள் சுட்டிக்காட்டியது போல புவியின் வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வினால் அவை எரிந்து விடுகின்றன. ஆனால் தொடக்க கால புவியின் வளிமண்டலம் எத்தனை அடர்த்தியாக இருந்திருக்கும்? இன்று இருக்கும் வளிமண்டலம் புவியின் உயிர் பரிணாமத்துடனே இணைந்து உருவான ஒன்றாகும். என்ற போதிலும் அவற்றில் கூட சிலதுண்டுகள் புவியினை வந்தடையத்தான் செய்கின்றன. இந்த விண்கற்கள் பொதுவாக சிறியவை. இவற்றினால் சொல்ல தக்க அளவிலான வடுக்களை கிரேட்டர்களை உருவாக்கிட முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கிரேட்டரை உருவாக்கும் தன்மை கொண்ட விண்கற்கள் மிகப் பெரியவை. உராய்வினால் ஏற்படும் சூடேறி, எரிந்த பகுதிகள் போகவும் மீதி பூமியை தாக்கியதென்றால் அது பெரும் கிரேட்டரை உருவாக்கிடும். வானவியல் நிகழ்வுகள் பெரும் கால இடைவெளிகளில் நிகழ்வன. எனவே அடுத்த பெரும் தாக்குதலுக்கு இன்னமும் பல ஆயிரம் வருடங்கள் ஆகலாம். (அல்லது நாளையே நிகழலாம். :) துங்கஸ்கா (1908) ஒரு எடுத்துக்காட்டு)

அரவிந்தன் நீலகண்டன்.