Friday, July 20, 2007

ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை என்ன?

உங்கள் வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் தேவையில்லாமல் எரிய விட்டு விட்டு மூன்று மணிநேரம் புகையை கக்கியபடி உங்கள் காரை விரட்டுங்கள். இதனால் ஏற்படும் விரயமும் மாசும் ஒரு கிலோ மாட்டிறைச்சியால் ஏற்படும் மாசினைக்காட்டிலும் குறைவு என்கிறார்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள். ஜப்பானிய தேசிய கால்நடை மற்றும் புல்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது. காற்று மண்டல சூடேற்றம், நீரின் அமிலத்தன்மையேற்றம் மற்றும் நீர்நிலைகளின் சாவு (eutrophication) ஆகிய சூழலியல் நிகழ்வுகளில் மாட்டிறைச்சி உற்பத்தியின் தாக்கம் குறித்த ஆராய்ச்சியினை இந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். இறைச்சிக்காக கன்றுக்குட்டிகளை உற்பத்தி செய்தல், விலங்குகள் மேலாண்மை, மற்றும் அவற்றுக்கான தீவன உற்பத்தி மற்றும் போக்குவரவு செலவு ஆகியவற்றினை இந்த ஆராய்ச்சி கணக்கில் எடுத்துக்கொண்டது. மேலும் இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலுமாக ஒரு அலகு மாட்டிறைச்சி உற்பத்தி சுற்றுப்புற சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவாக இருக்கும் என்பது கணக்கிடப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவு காட்டுவது என்னவென்றால் ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி என்பது 36.4 கிலோகிராம் கரியமிலவாயு காற்றுமண்டலத்தில் வெளியிடப்படுவதற்கு சமம் என்பதையாகும். அதாவது ஒரு கிலோ மாட்டிறைச்சி என்பது சராசரி ஐரோப்பிய கார் 250 கிலோமீட்டர்களை கடக்கும் போது வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் அதற்காக உள்ளெடுக்கும் ஆற்றல் 20 நாளைக்கு 100 வாட்ஸ் மின் விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதற்கு சமானமாகும். இதில் விலங்குப்பண்ணையின் உள் கட்டமைப்பு மற்றும் இறைச்சியினை எடுத்துச்செல்லும் போக்குவரத்து செலவு ஆகியவை கணக்கில் எடுக்கப்படவில்லை. அதையும் கணக்கில் எடுத்தால் ஒரு கிலோ மாட்டிறைச்சிக்கு கொடுக்கப்படும் சூழலியல் விலை எங்கோ எகிறிவிடும். இறைச்சி உற்த்த்தியின் இந்த சூழலியல் விலைகளைக் குறைத்திட பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தீவனத்தினை இயற்கை தீவனம் ஆக்குவதாகும். அவ்வாறு இயற்கையான புல் கொடுத்து வளர்க்கப்படும் மாடுகளில் 40 சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடும் 85 சதவிகித ஆற்றலும் இரசாயன தீவன கால்நடைகளைக் காட்டிலும் குறைக்கப்படுகின்றன என ஏற்கனவே 2003 இல் வெளியான ஸ்வீடிஷ் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. இங்கிலாந்து சைவ உணவு கழக செயலாளரான சூ டெய்லரைப் பொறுத்தவரையில் "கரிம வெளியீட்டை தடுக்க எத்தனையோ தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை செய்ய மிகச்சிறந்த வழி புலால் உண்பதை நிறுத்துவதுதான்." சும்மாவா சொன்னார் திருவள்ளுவர்:
"பொருளாட்சி போற்றாதார்க்(கு) இல்லை; அருளாட்சி
ஆங்கில்லை ஊன் தின் பவர்க்கு."
"அருள் அல்ல(து) யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல(து) அவ்வூன் தினல்."

நன்றி: Daniele Fanelli, Meat is the Murder of Environment
http://environment.newscientist.com/article/mg19526134.500?DCMP=NLC-nletter&nsref=mg19526134.500

5 comments:

ஜடாயு said...

பயனுள்ள தகவல்.

இந்த அதிக மாசு விலை மாட்டிறைச்சிக்குத் தான் இல்லையா? கோழி இறைச்சி உருவாக்கத்திலும் இவ்வளவு சூழலியல் பாதிப்புக்கள் உண்டா அல்லது மிகக் குறைவா?

அரவிந்தன் நீலகண்டன் said...

மாடுகள் மீத்தேனை வெளியிடுவதால் அவை இறைச்சிக்காகவே பெருமளவில் வளர்க்கப்படும் போது அதிக மாசை உருவாக்குகின்றன. அதே நேரத்தில் மேற்கத்திய பண்ணை முறை இறைச்சி உற்பத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படும் தீவன உற்பத்தி தொழிற்சாலைகளும் அதிக மாசினையும் காற்று மண்டல சூடேற்ற வாயுக்களையும் வெளியிடுகின்றன. இத்துடன் ஒப்பிடுகையில் கோழி பண்ணைகளால் ஏற்படும் மாசு குறைவுதான். மீத்தேன் வெகு வெகு குறைவு.

சம்சாரி said...

அதிர்ச்சிகரமான உண்மையை சொல்லி இருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி சம்சாரி நடையை எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in