Thursday, October 20, 2005

உயிரி எரிபொருள் : சாண எரிவாயுவுக்கு பதிலியாக -2

மேலே படிக்கிறதுக்கு முன்னர் இரண்டு சுவாரசியமான சிந்திக்க தூண்டும் தகவல்கள பகிர்ந்துக்குவமா?


  • உங்களுக்கு தெரியுமா?

பெட்ரோலிய எரிபொருளை பயன்படுத்துற வாகனத்தில நாம ஒரு வருசத்துக்கு 20000 கி.மீ. தூரம் பிரயாணம் செய்வோம்னு வைச்சுகிட்டா 5 டன் காற்றை மாசுபடுத்துறோங்க. கணக்கு போட்டு பார்த்துக்குங்க. பெட்ரோலியத்தை எரிபொருளாகக் கொண்ட மோட்டார் வாகனங்கள் மட்டும் ஒரு நாளைக்கு 1,37,000 தயாராகின்றன. ஒரு வருசத்துக்கு ஏறத்தாழ 5 கோடி மோட்டார் வாகனங்கள் அப்படீன்னு கேள்வி. எம்புட்டு நல்ல காத்து அம்போன்னு போவுது பார்த்துக்குங்க.


  • உங்களுக்கு தெரியுமா?

பிலிப்பைன்ஸ் இருக்குதில்லீங்களா அங்கே 1970-களின் போது பெட்ரோலிய எரிபொருள் விலை எவரெஸ்ட் உயரத்துக்கு எகிறனதும், 68 பேருந்துகள் மணிலா நகரிலேயே தேங்காய் எண்ணெய் மூலம் 30 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிருக்காங்க.


சரி விசயத்துக்கு வருவோங்க.


ஜெத்ரோபா கற்காஸ் அப்படீன்னு தாவரவியல்-காரங்க சொல்ற காட்டாமணக்கு பயிர் செய்து அறுவடை செய்ய ஏற்றதாக உள்ள செடிங்க. ஏன் அப்படீன்னீங்கன்னா அதன் பின்வரும் குணாதிசயங்கதான் அத அப்படி ஆக்குதுங்க:


  • வறட்சியை தாங்கி வளர்ற செடிங்க
  • வெப்பமண்டலத்துக்கு ஏற்றதுங்க
  • மழை குறைவா இருந்தாலும் சரி வானம் பொய்ச்சாலும் வளர்ந்துருங்க.
  • மண் வளம் இல்லைன்னாலும் பரவாயில்லீங்க.
  • மழை பெஞ்சு அந்த வெள்ளத்துனால ஏற்படற நில அரிப்பையும் தடுக்குங்க
  • கால்நடைங்க காட்டாமணக்கை மேயப்போறதில்லீங்க.

சரி காட்டாமணக்கு வாழ்க்கை பத்தி சில விசயங்க:
  • காட்டாமணக்கின் ஆயுட்காலம்: 50 ஆண்டுகள்
  • உயரம்: 3-6 மீட்டர்
  • பூக்கும் பருவம்: ஏப்ரல், ஆகஸ்டு
  • அறுவடை: ஜூன், அக்டோ பர்

Jatropha life cycle
வானம் பார்த்த பயிராக ஹெக்டேருக்கு 2500 செடி நட்டீங்கன்னா (பொதுவா ஊடுபயிர் வச்சு செய்யிறது என்னைக்குமே நல்லதுங்க. ஏன்னா ஒற்றைப்பயிர் விவசாயம் அப்படீங்கறது பூச்சிங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கிற மாதிரிங்க.) 250 கிலோவில ஆரம்பிச்சு 6-ஆவது வருசம் 4000 க்க்கு போகும் அப்படீங்கறாங்க.

Monday, October 17, 2005

உயிரி எரிபொருள் : சாண எரிவாயுவுக்கு பதிலியாக -1

பல ஏழை விவசாயிகள் தம் குடும்பத்தின் அன்றாட சமையலுக்கு வேண்டிய எரிவாயு உற்பத்தி செய்யத்
தேவையான அன்றாட சாணம் கிடைக்கும் நிலையில் இல்லை. மேலும் கால்நடைகள் விற்கப்பட வேண்டிய
தேவைகள் ஏற்படும் போது சாண-எரிவாயுகலன்கள் செயலிழந்து விடுவதும் நாம் காண்கிற ஒரு நிகழ்ச்சிதான்.
எனவே எண்ணெய் விதைகளிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்வதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நமக்கு மிகவும் பழக்கமான, சாகுபடியிலுள்ள, எளிதில் கிடைக்கக் கூடிய 42 எண்ணெய் விதைகள் (மற்றும்
பழக்கொட்டைகளை) இவ்வித (உயிரி-எரிவாயு உற்பத்தி) பயன்பாட்டிற்கு ஏற்றதாக ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளார்கள் [1]. பொதுவாகவே இத்தகைய விதை/கொட்டைகளில் 25 சதவிகித எண்ணெயும் மீதம்
சக்கைத்தன்மையும் உள்ளமையால் ஒரு குறிப்பிட்ட மரத்தையே நெடுக சாகுபடி செய்ய வேண்டிய (monoculture)
அவசியமில்லை. இப்போதைக்கு இவ்விதத்தில் ஆராய்ச்சிக்கு நன்றாக உட்படுத்த பட்டுள்ளவை:
வேப்பங்கொட்டைகள் (Azadirachata indica), புங்கம் (Pongamia pinnata) ஆமணக்கு (Ricinus communis)
காட்டாமணக்கு (Jatropha curcas) ஆகியவை.
ஒரு ஒப்பீட்டைக் காணலாம்: இது பேரா.சுப்பாராவ் et al அளிக்கும் ஆராய்ச்சி முடிவு

  • உள்ளிடும் உலர்ந்த எடைக்கு ஈடாக கிடைக்கும் எரிவாயு கனஅளவு என்று பார்த்தால்:
    சாண எரிவாயு:
    கிலோவுக்கு 0.18 மீ3

    ஆமணக்கு எரிவாயு: 0.4-0.5 மீ3
  • மீத்தேன் வாயு (விழுக்காட்டளவில்)

    சாண எரிவாயு: 55-60 %

    ஆமணக்கு எரிவாயு: 70 %
  • தினசரி உள்ளீட்டளவு-(உலர் எடையளவு):

    சாண எரிவாயு கலனுக்கு : 6-10 கிலோ

    ஆமணக்கு எரிவாயுகலனுக்கு : 1.5 -2.0 கிலோ

[நன்றி:Prof.E.C.Subbarao et al., 'Biogas from Non-edible oil cakes', 'Tree Borne Oil seeds as a source of Energy for Decentralized planning' MNES, edited by Dr.P.Radhakrishna, Government of India]
நைட்ரஜன் இருக்கும் புரதமும் அதிக சதவிகிதத்தில் உள்ளது. உதாரணமாக வேப்பங்கொட்டையில் எண்ணெய் 20 சதவிகிதம் புரதம் 13-35 சதவிகிதம். காட்டாமணக்கில் எண்ணெய் 30-40 சதவிகிதம் புரதம் 38 சதவிகிதம்.கார்பன் எரிவாயுவிலும் கரியமிலவாயுவிலும் வெளியேறிவிடுவதால் பொதுவாக எரிவாயுவுக்கு பின்னர் ஏற்படும் கழிவில் உலர்-எடை அளவில் நைட்ரஜன் அடர்த்தி (concentration) அதிகரிக்கும். இதுவும் சாண-எரிவாயுக்கழிவினைக்
காட்டிலும் அதிகம். எனவே அவை நல்ல உரமாக பயன்படுத்தப்பட முடியும். [வளரும்]