Friday, April 06, 2007

கோதுமைக்கு ஆபத்து


கோதுமையை தாக்கும் பூஞ்சான நோய்

கோதுமை பயிரை தாக்கும் பூஞ்சானின்(fungus) புதிய வகை ஒன்று வேகமாக பரவி வருகிறது. கோதுமை பயிரின் தண்டு, தாள் மற்றும் கதிரை தாக்கும் நோய் இது. பசுமை
புரட்சியின் போது பூஞ்சான் - பூசினியா கிராமினிஸ் (Puccinia graminis) க்கு எதிரான தடுப்புத்தன்மை கொண்ட புது வீரிய அதிக விளைச்சல் தரும் கோதுமை வகைகள்
உலகெங்கும் பரப்பப்பட்டன. இன்றைக்கு இந்த வகைகளின் தடுப்புத்தன்மைக்கு மேலான தாக்கும் தன்மை கொண்ட இந்த பூஞ்சான் வகை அதிக வேகமாக பரவி வருவது
அறியப்பட்டுள்ளது. Ug99 என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதியவகை பூஞ்சான் முதன்முதலாக உகாண்டாவின் கோதுமை வயல்களில் 1999 இல் கண்டறியப்பட்டது. மானுட
தேர்வின் கோதுமை வகையின் நோய் தடுப்புக் சக்திக்கு மேலானதாக தாக்கும் சக்தி இயற்கை தேர்வின் மூலம் பரிணமித்துள்ள இப்புதிய வகைக்கு உலகின் அனைத்து கோதுமை
பயிரிடும் நாட்டு கோதுமைகளும் இலக்காகும் நிலையில் உள்ளன. வீசும் காற்று மூலமாக இந்த பூஞ்சான் ஸ்போர்கள் பரவுகின்றன. இது 2002 இல் கென்யாவை தாக்கியது, பின்னர்
2007 ஜனவரியில் ஏமனிலும் வடக்கே சூடானிலும் காணப்பட்டது. பொதுவாக காற்று மூலம் பரவும் ஸ்போர்களின் தாக்குதலை கணிக்கும் அறிவியலாளர்கள் இது விரைவில் எகிப்தின்
கோதுமை வயல்களையும் தாக்கக் கூடும் என்கின்றனர். விரைவில் மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பாரத நேபாள கோதுமை வயல்களை இது தாக்கிடக்கூடும்.

இருவழிகளில் இந்திய கோதுமை வயல்கள் தாக்கப்படும் அபாயம் உள்ளது.

தற்சமயம் உலகில் கோதுமை உற்பத்தி அதன் தேவையைக் காட்டிலும் குறைவாக உள்ளது. 1972க்கு பிறகு இப்போதுதான் கோதுமை சேமிப்பு இந்த அளவு மோசமாக இருப்பது. கோதுமை விலையோ உலக சந்தையில் 14 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இப்போது மீண்டும் பஞ்சத்தை வரவைப்பது போன்றதோர் நோய் தாக்குதலை நாம் நம் கோதுமை
வயல்களில் அனுமதிக்க முடியாது. 1970களில் இந்த பூஞ்சான் நோயினை எதிர்க்கும் சக்தி கொண்ட ரக அதிக விளைச்சல் தரும் வீரிய கோதுமை ரகங்களை உருவாக்கியவர் நார்மன் போர்லாக். (பசுமை புரட்சியின் தந்தை எனப்படும் இவர் இதற்காக நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.) இன்று 90 வயதில் புற்று நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் இவருக்கு இந்த செய்தி ஒரு பழைய எதிரியின் மீள்-வருகை. 1999 இலேயே அறியப்பட்ட இந்த வீரிய ரக பூஞ்சானுக்கு எதிர்ப்பு உருவாக்காததற்கு அலட்சிய மனோபாவமே காரணம் என இவர் கருதுகிறார்.

நார்மன் போர்லாக்

அதே நேரத்தில் மெக்ஸிகோவில் அமைந்துள்ள அகில உலக கோதுமை ஆராய்ச்சி மையம் பாரதப்பகுதியில் அமைந்த நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பாரதம் மற்றும்
நேபாளத்தில் இந்த நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட கோதுமைகளை 27 சோதனை வயல்களில் பயிரிட்டு வருவதை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த நோய் தாக்கும் போது
அனைத்து கோதுமை விவசாயிகளுக்கும் போதுமான விதைகள் இந்த சோதனை வயல்களிலிருந்து கிடைத்திடுமா விதை பெருக்கம் செய்திடுவார்களா என்பதுதான் கேள்வி. வளர்ந்த நாடுகளின் கோதுமை விவசாயிகளுக்கும் இதே பிரச்சனைகள் உண்டு. இறுதியாக வளர்ந்த நாடோ வளரும் நாடோ இதற்கான தீர்வு உயிரிப்பன்மை (bio-diversity). அதன்
மூலமாகவே இத்தகைய அவ்வப்போது எதிர்பாராது எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். இன்று பலரக கோதுமைகளிலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி ஜீன்களை தேடி அதனை சேர்க்கை செய்து நோய் எதிர்ப்பும் அதிக விளைச்சலும் கொண்ட கலப்பு ரக கோதுமைக்கான தேடல் நடைபெறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த பிராந்திய கோதுமை வகைகள் அழிய பசுமைப்புரட்சி ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. அக்கால கட்டத்தில் பிராந்திய பயிர் ரகங்களை ஒருவித காட்சிப்பொருள் தன்மையுடன் பார்த்தனர் விவசாய
ஆராய்ச்சியாளர்கள். மக்களிடமிருந்து பயிர் விதைகள் அன்னியப்படுத்தப்பட்டு ஆராய்ச்சி சாலைகளில் பத்திரப்படுத்தப்பட்டன. (இதில் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு ஹெச்சார்யா
என்கிற அருமையான வேளாண் விஞ்ஞானி. மக்களிடமிருந்து அன்னியப்படுத்தாமல் இந்த ரகங்களை பாதுகாத்து தொடர்ந்து பயிரிடவேணுமென அவர் கூறிவந்தார்.)போர்லாக்
இன்னமும் இவ்வாறு அனைத்து சிறந்த ஜீன்களையும் சங்கமிக்க வைத்து பரந்துபட்ட நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வீரிய கோதுமை ரகம் ஒன்றினை கற்பனை செய்கிறார். ஆனால்
அதைவிட சிறந்த உபாயம் அந்தந்த பிராந்திய மக்கள் சமுதாயங்கள் -குறைந்தது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாவது- அங்கங்குள்ள ரகங்களை மரபு சார் முறையில் பாதுகாப்பதுதான்
என்றே தோன்றுகிறது. அதற்கிடையில் இந்த நோய் இந்திய கோதுமை வயல்களை தாக்காது என நம்புவோம்.

கோதுமை விளைவிக்கும் நாடுகள்

(நன்றி: நியூ சயிண்டிஸ்ட் ஏப்ரல் 3 2007 http://environment.newscientist.com/channel/earth/mg19425983.700?DCMP=NLC-nletter&nsref=mg19425983.700)