Friday, July 20, 2007
ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை என்ன?
"பொருளாட்சி போற்றாதார்க்(கு) இல்லை; அருளாட்சி
ஆங்கில்லை ஊன் தின் பவர்க்கு."
"அருள் அல்ல(து) யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல(து) அவ்வூன் தினல்."
நன்றி: Daniele Fanelli, Meat is the Murder of Environment
http://environment.newscientist.com/article/mg19526134.500?DCMP=NLC-nletter&nsref=mg19526134.500
Friday, April 06, 2007
கோதுமைக்கு ஆபத்து
கோதுமை பயிரை தாக்கும் பூஞ்சானின்(fungus) புதிய வகை ஒன்று வேகமாக பரவி வருகிறது. கோதுமை பயிரின் தண்டு, தாள் மற்றும் கதிரை தாக்கும் நோய் இது. பசுமை
புரட்சியின் போது பூஞ்சான் - பூசினியா கிராமினிஸ் (Puccinia graminis) க்கு எதிரான தடுப்புத்தன்மை கொண்ட புது வீரிய அதிக விளைச்சல் தரும் கோதுமை வகைகள்
உலகெங்கும் பரப்பப்பட்டன. இன்றைக்கு இந்த வகைகளின் தடுப்புத்தன்மைக்கு மேலான தாக்கும் தன்மை கொண்ட இந்த பூஞ்சான் வகை அதிக வேகமாக பரவி வருவது
அறியப்பட்டுள்ளது. Ug99 என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதியவகை பூஞ்சான் முதன்முதலாக உகாண்டாவின் கோதுமை வயல்களில் 1999 இல் கண்டறியப்பட்டது. மானுட
தேர்வின் கோதுமை வகையின் நோய் தடுப்புக் சக்திக்கு மேலானதாக தாக்கும் சக்தி இயற்கை தேர்வின் மூலம் பரிணமித்துள்ள இப்புதிய வகைக்கு உலகின் அனைத்து கோதுமை
பயிரிடும் நாட்டு கோதுமைகளும் இலக்காகும் நிலையில் உள்ளன. வீசும் காற்று மூலமாக இந்த பூஞ்சான் ஸ்போர்கள் பரவுகின்றன. இது 2002 இல் கென்யாவை தாக்கியது, பின்னர்
2007 ஜனவரியில் ஏமனிலும் வடக்கே சூடானிலும் காணப்பட்டது. பொதுவாக காற்று மூலம் பரவும் ஸ்போர்களின் தாக்குதலை கணிக்கும் அறிவியலாளர்கள் இது விரைவில் எகிப்தின்
கோதுமை வயல்களையும் தாக்கக் கூடும் என்கின்றனர். விரைவில் மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பாரத நேபாள கோதுமை வயல்களை இது தாக்கிடக்கூடும்.
தற்சமயம் உலகில் கோதுமை உற்பத்தி அதன் தேவையைக் காட்டிலும் குறைவாக உள்ளது. 1972க்கு பிறகு இப்போதுதான் கோதுமை சேமிப்பு இந்த அளவு மோசமாக இருப்பது. கோதுமை விலையோ உலக சந்தையில் 14 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இப்போது மீண்டும் பஞ்சத்தை வரவைப்பது போன்றதோர் நோய் தாக்குதலை நாம் நம் கோதுமை
வயல்களில் அனுமதிக்க முடியாது. 1970களில் இந்த பூஞ்சான் நோயினை எதிர்க்கும் சக்தி கொண்ட ரக அதிக விளைச்சல் தரும் வீரிய கோதுமை ரகங்களை உருவாக்கியவர் நார்மன் போர்லாக். (பசுமை புரட்சியின் தந்தை எனப்படும் இவர் இதற்காக நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.) இன்று 90 வயதில் புற்று நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் இவருக்கு இந்த செய்தி ஒரு பழைய எதிரியின் மீள்-வருகை. 1999 இலேயே அறியப்பட்ட இந்த வீரிய ரக பூஞ்சானுக்கு எதிர்ப்பு உருவாக்காததற்கு அலட்சிய மனோபாவமே காரணம் என இவர் கருதுகிறார்.
அதே நேரத்தில் மெக்ஸிகோவில் அமைந்துள்ள அகில உலக கோதுமை ஆராய்ச்சி மையம் பாரதப்பகுதியில் அமைந்த நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பாரதம் மற்றும்
நேபாளத்தில் இந்த நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட கோதுமைகளை 27 சோதனை வயல்களில் பயிரிட்டு வருவதை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த நோய் தாக்கும் போது
அனைத்து கோதுமை விவசாயிகளுக்கும் போதுமான விதைகள் இந்த சோதனை வயல்களிலிருந்து கிடைத்திடுமா விதை பெருக்கம் செய்திடுவார்களா என்பதுதான் கேள்வி. வளர்ந்த நாடுகளின் கோதுமை விவசாயிகளுக்கும் இதே பிரச்சனைகள் உண்டு. இறுதியாக வளர்ந்த நாடோ வளரும் நாடோ இதற்கான தீர்வு உயிரிப்பன்மை (bio-diversity). அதன்
மூலமாகவே இத்தகைய அவ்வப்போது எதிர்பாராது எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். இன்று பலரக கோதுமைகளிலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி ஜீன்களை தேடி அதனை சேர்க்கை செய்து நோய் எதிர்ப்பும் அதிக விளைச்சலும் கொண்ட கலப்பு ரக கோதுமைக்கான தேடல் நடைபெறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த பிராந்திய கோதுமை வகைகள் அழிய பசுமைப்புரட்சி ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. அக்கால கட்டத்தில் பிராந்திய பயிர் ரகங்களை ஒருவித காட்சிப்பொருள் தன்மையுடன் பார்த்தனர் விவசாய
ஆராய்ச்சியாளர்கள். மக்களிடமிருந்து பயிர் விதைகள் அன்னியப்படுத்தப்பட்டு ஆராய்ச்சி சாலைகளில் பத்திரப்படுத்தப்பட்டன. (இதில் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு ஹெச்சார்யா
என்கிற அருமையான வேளாண் விஞ்ஞானி. மக்களிடமிருந்து அன்னியப்படுத்தாமல் இந்த ரகங்களை பாதுகாத்து தொடர்ந்து பயிரிடவேணுமென அவர் கூறிவந்தார்.)போர்லாக்
இன்னமும் இவ்வாறு அனைத்து சிறந்த ஜீன்களையும் சங்கமிக்க வைத்து பரந்துபட்ட நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வீரிய கோதுமை ரகம் ஒன்றினை கற்பனை செய்கிறார். ஆனால்
அதைவிட சிறந்த உபாயம் அந்தந்த பிராந்திய மக்கள் சமுதாயங்கள் -குறைந்தது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாவது- அங்கங்குள்ள ரகங்களை மரபு சார் முறையில் பாதுகாப்பதுதான்
என்றே தோன்றுகிறது. அதற்கிடையில் இந்த நோய் இந்திய கோதுமை வயல்களை தாக்காது என நம்புவோம்.
(நன்றி: நியூ சயிண்டிஸ்ட் ஏப்ரல் 3 2007 http://environment.newscientist.com/channel/earth/mg19425983.700?DCMP=NLC-nletter&nsref=mg19425983.700)
Tuesday, February 06, 2007
வீட்டு மூலிகை தோட்டக் கையேடு
இக்கையேட்டில் 14 மூலிகை செடிகளின் கறுப்பு-வெள்ளை படங்களை அளித்துள்ளார்கள். அத்துடன் மூலிகையின்
- வழங்கு பெயர்,
- அறிவியல் பெயர்
- மருந்துக்கு உதவும் பாகங்கள்
- கட்டுப்படுத்தும் நோய்கள்
- சுத்தி செய்தல்
- பயன்படும் முறை
- வளர்க்கும் விதம்
ஆகியவை ஒவ்வொன்றிற்கும் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக மாதுளையை எடுத்துக்கொள்வோம்.
- Punica granatum
- இனம் : செடி
- மருந்துக்கு உதவும் பாகங்கள்: பழம், பழவோடு, பிஞ்சு
- கட்டுப்படுத்தும் நோய்கள்: பேதி, இரத்தக் கிராணி, பாண்டு (வெளுப்பு) மேகநோய் ஆகிய பிணிகள் நீங்கி உடற்பலம் உண்டாகும்.
- பயன்படுத்தும் விதம்:
- 1. 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.
- 2. பழச்சாற்றை தேவைக்கேற்ப பருகிவர பாண்டு நீங்கி உடற்பலம் தரும்.
- 3. இதன் பழஓட்டை நிழலில் காயவைத்து பொடியாக்கி 5-10 கிராம் வீதம் 3 வேளை பொடித்துண்ண பேதி வயிற்றுப்புண் நீங்கும்.
- 4. மாதுளம் பிஞ்சு தளிர் இவைகளை 20 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து பாலில் மூன்று வேளை வீதம் உண்டுவர மேகநோய், வெள்ளைப்போக்கு நிற்கும்.
- 5. வாய்ப்புண் குணமாக இதன் தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன குணமாகும்.
- 6. இதன் பழ-ஓட்டைப் பொடித்து அதனுடன் வெந்தயம் பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம் வரை தினமும் 3 வேளை வீதம் உண்டுவர மேகநோய், பாண்டு அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகியவை குணமாகும்.
- 1. 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.
- வளர்க்கும் விதம்: விதை, குச்சி.
இவ்விதமாக கீழ்கண்ட 14 மூலிகைச்செடிகள் குறித்து கூறப்பட்டுள்ளது:
1. சோற்றுக்கற்றாழை : Aloe vera 2. நெல்லி : Emblica officinalis 3. செம்பரத்தை : Hibiscus rosasinensis 4. துளசி : Ocimum sanctum 5.தூதுவளை:Solanum trilobatum 6.கற்பூரவள்ளி: Plectranthus ambonicus 7.நிலவேம்பு: Andrographis paniculata 8.மாதுளை:Punica granatum 9.மஞ்சள் கரிசாலை: Wedelia calendulacea 10. ஆடாதோடை: Adhatoda vasica 11. பப்பாளி: Carrica papaya 12. முருங்கை: Moringa indica (Moringa oleifera) 13. நொச்சி : Vitex negundo 14. மணத்தக்காளி : Solanum nigrum
மனையடி மூலிகை மருத்துவம்
- விவேகானந்த கேந்திரம் - நார்டெப்
- கன்னியாகுமரி - 629702
- பக்கங்கள்: 28
Monday, January 29, 2007
ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு
ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா பாரத பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் மிகவும் சுதேசிய நோக்கில் அணுகியவர். பொதுவாக காந்தியவாதிகள் என்றாலே மிகவும் கட்டுப்பெட்டித்தனமாக தொழில்நுட்ப விரோதிகளாக இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் உண்டு. பல சமயங்களில் உண்மையும் அப்படித்தான் இருந்து தொலைக்கிறது. ஆனால் மகாத்மா காந்தியின் தொழில்நுட்ப பார்வை அத்தகைய குறுகிய தொழில் நுட்ப மறுப்பு பார்வை அல்ல. ராட்டையை அவர் ஐரோப்பிய தொழிற்புரட்சிக்கு ஒரு மாற்றான குறியீடாகவே முன்வைத்தார் என கருத வேண்டியுள்ளது. ஐரோப்பிய தொழிற்புரட்சியின் முக்கிய அம்சங்கள்: ஆற்றலையும் மூலதனத்தையும் பெரிதும் சார்ந்த தொழில் நுட்பங்கள். இந்த தொழில்நுட்பங்கள் சார்ந்த ஒரு பண்பாட்டு வளர்ச்சியாக ஐரோப்பாவின் நவீன கால முன்னேற்றத்தை நாம் காண்போமென்றால், அதன் அடிப்படை காலனிய விரிவாதிக்கத்தின் மேல் எழுப்பப்பட்டது என்பதை அறிய முடியும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நீடிப்பு என்பது ஒரு பிராந்திய வளத்தினால் தன்னிறைவு பெறமுடியாத ஒன்றாகும். எனவேதான் அதன் வளர்ச்சிக்காக வன்முறை - ஆதிக்கம் ஆகியவை இன்றியமையாத ஒன்றாகிறது. எனவே தீர்வு என்ன? குவித்தன்மை அற்ற, மூலதன-ஆற்றல் ஆகியவற்றை பெருமளவு உள்ளீடு செய்யாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியமாகிறது. பயன்படுத்துவோருக்கு தெளிவாக தெரிகிற பிராந்தியத் தன்மைகளை தன்னுள் கொண்டு தகவமைந்த (adapted to local conditions) ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியமாகிறது. தமிழ்நாட்டின் தவப்புதல்வன் ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா காந்திய சிந்தனையை அதன் இயல்பான அடுத்த கட்ட பரிணாம நிலைக்கு நகர்த்திய சிந்தனை மேதை ஆவார். பொருளாதார சிந்தனையாளர் என்பதுடன் அன்னார் விவசாய தொழில்நுட்பங்களில் சிறந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சாண எரிவாயு தொழில்நுட்பத்தை மிகவும் நுணுக்கமாக ஆய்வு செய்திருந்தார். சாண-எரிவாயுவினை அவர் வெறும் வீட்டுச்சமையலுக்கான ஆற்றல் அளிக்கும் எரிபொருள் தொழில்நுட்பமாக மட்டுமே கண்டாரில்லை. மாறாக விவசாயியின் அன்றாட வாழ்வுடன் இணைந்ததொரு மையமாக மாற்றிட அவர் விழைந்தார். சாண எரிவாயு அடுப்பிலிருந்து வெளிவரும் சாணஎரிவாயுக்கழிவு (biogas slurry) ஒரு சிறந்த உரம் என்பதனை அவர் அடிக்கோடிட்டு காட்டினார். 'விவசாயி வீட்டுக்கொல்லையின் உர தொழிற்சாலையாக சாண எரிவாயு கலன் பயன்படும்' என அவர் கூறினார். இந்த தொழில்நுட்ப பார்வை மாற்றத்தின் முக்கியத்துவம் அவர் கூறிய காலகட்டத்தில் முழுமையாக உணரப்படவே இல்லை. குமரப்பா அவர்கள் பாரத பண்பாட்டினோடும் நம் மண் சார்ந்த தொழில்நுட்பத்தோடும் தன்னை எந்த அளவு இணைத்துக்கொண்டார் என்றால் தமது உடல் சாணி தட்டிகளால் எரிக்கப்பட வேணுமென தமது உயிலில் எழுதி அவ்வாறே அதனை நிறைவேற்றிடவும் செய்தார் அம்மகான். ஆனால் சாண எரிவாயு கலன் அத்தனை தொழில்நுட்ப தகவமைப்பு பெற்றிருந்தும் ஏனோ பாரத கிராம வாழ்க்கையில் ஒருங்கிணைந்திடவே இல்லை. (குமரப்பாவால் ஈர்க்கப்பட்டு சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் இளைய தலைமுறை தலைவர் கூத்தம்பாக்கம் ரங்கசாமி இளங்கோ அவர்கள்)
விவேகானந்த கேந்திரம் - நார்டெப்
விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம் (VK-NARDEP) 1980களிலிருந்து இயங்க ஆரம்பித்தது. விகே-நார்டெப் (VK-NARDEP) என அழைக்கப்படும் இத்தொழில்நுட்ப திட்டம் தேசம் சார்ந்து சாண எரிவாயு கலன்களை ஆய்வு செய்தது. கலன் வடிவமைப்பு குறைநிறைகளை கண்டறிந்து குறைந்த செலவில் வடிவமைக்கப்படும் ஒரு சாண எரிவாயு கலனை நார்டெப் வடிவமைத்தது. இது வின்கேப் மாதிரி என அழைக்கப்படுகிறது. இது நிலைத்த அரைகோள (fixed dome model) எரிகலன் ஆகும். இது தீனபந்து அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட வடிவாகும். இந்த எரிகலன் மாதிரியின் முக்கிய வேறுபாடு என்னவென்றால் இதன் அரைகோள அமைப்பு செங்கல்களால் ஆனதல்ல மாறாக மூங்கிலால் ஆனதாகும். உருக்கு அமைப்புகளால் (எரிவாயு வெளியேறாத வகையில்) பலப்படுத்தப் பட்ட இக்கட்டுமானத்தின் மீது ஒரு பூச்சும் அடிக்கப்படும். இந்த அமைப்பின் மூலம் கட்டுமான செலவு 12-20 விழுக்காடு குறைக்கமுடியும்.
சாண எரிவாயுகலங்களின் பிரச்சனை என்னவென்றால் அரசு மானியமானது கலத்தின் கொள்ளளவு அடிப்படையில் கொடுக்கப்பட்டதே ஆகும். இதன் விளைவாக, அதிக மானியம் பெற விரும்பிய விவசாயிகள் பலர் அதிக கொள்ளளவு கொண்ட சாண எரிவாயுகலங்களைக் கட்டிவிட்டனர். இதனால் மாடுகள் குறையும் போது சாணி உள்ளீடு குறைந்து பல எரிவாயுகலங்கள் செயலற்றநிலையை அடைந்துவிட்டன. நார்டெப் சாண-எரிவாயு தொழில்நுட்பக் குழுவினர் இத்தகைய எரிவாயுக்கலன்களின் கொள்ளளவினைக் குறைத்து மீண்டும் செயல்பட வைப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியினை அடைந்துள்ளார்கள். 1982 இல் இருந்து 2000 சாண எரி-வாயுக்கலன்களை விவேகானந்த கேந்திரம் நிறுவியுள்ளது என்பதுடன் இன்றைய தேதியில் இவற்றின் செயல்படும் விழுக்காடு 95க்கும் அதிகமாகும்.
விவேகானந்த கேந்திரம் குமரப்பாவின் சாண எரிவாயுக்கல கழிவினை உணவு உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக ஒரு முழுமையான திட்டத்தினை உருவாக்க நினைத்தது. விவசாயிகள் குறைந்த செலவில் வீட்டுக்கொல்லையிலேயே மாட்டுக்கான இயற்கை தீவனமான அஸோலாவினை வளர்க்க கேரளாவினைச் சார்ந்த உயிர்-தொழில்நுட்ப விஞ்ஞானியான டாக்டர்.கமலாசனன் பிள்ளை நார்டெப்-முறையினை ஏற்கனவே பிரபலப்படுத்தியிருந்தார். இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் இரண்டாம் வெள்ளைப்புரட்சியையே ஏற்படுத்தியுள்ள இந்த தொழில்நுட்பம் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நன்றாக பரவி வருகிறது. இந்த அஸோலா படுகையின் தயாரிப்பில் சாண எரிவாயுகழிவு பயன்படுத்தப்பட்டது. அஸோலா உயிர் உரமாகவும் பயன்படுத்த முடியும் அத்துடன் களை வளர்ச்சியை மட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். அதைப்போல மண்புழு உரக்கிடங்கு படுகையிலும் சாண எரிவாயுக்கழிவு பயன்படுத்தப்பட்டது. பஞ்சகவ்யம், ஜீவநீர் (நுண்ணுயிரிக்கலவை) ஆகியவற்றிலும் சாண எரிவாயுக்கழிவு உள்ளீடாக்கப்பட்டது, ஒரு விவசாயி இந்த சாண எரிவாயுக்கழிவு சார்ந்த விவசாய தொழில்நுட்பங்களை தமது வயலில் பயன்படுத்தும் பட்சத்தில் அவருக்கு இரசாயன உரம் சார்ந்த 30 சதவிகித செலவினைக் குறைக்க முடியும். இந்த தொழில்நுட்ப பரவுதல் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இயற்கை விவசாய களத்தில் ஈட்டியுள்ளது.
கல்யாணப் பரிசு இலாபமும் பெரிசு
உதாரணமாக, தென்காசி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை எடுத்துக்கொள்ளலாம். இன்று தென்தமிழ்நாட்டின் இயற்கை விவசாய தலைநகராக இந்த ஊர் விளங்குகிறது. முக்கியமாக திரு. அந்தோணி சாமி அவர்களும் திரு. கோமதிநாயகம் அவர்களும் இந்த இயற்கை விவசாய இயக்கத்திற்கு தலைமை தாங்குகின்றனர். கோமதிநாயகம் அவர்களின் திருப்புமுனையாக அமைந்தது சாண எரிவாயுக்கலன் தான். அவர் சொல்லுகிறார்: "இந்த சாண எரிவாயுக்கலன் வெறும் எரியாற்றல் மட்டும் அளிக்கும் கருவியல்ல அது மண்ணை செழுமையுறச்செய்கிறது. அதன் கழிவினால் இதுவரை இலட்சக்கணக்கான ரூபாய் இரசாயன உரங்களை நான் மிச்சம் செய்திருக்கிறேன்." என்று சொல்லுகிறார் அவர். அவர் கூற்றினை உறுதி செய்கின்றது குற்றாலம் பராசக்தி கல்லூரி நடத்திய மண்ணாய்வு. சாண எரிவாயுக்கழிவு பயன்படுத்தப்பட்ட நிலத்தில் பயன்படுத்தப்படாத இடத்தினைக் (control) காட்டிலும் பாக்டீரிய நுண்ணுயிரிகளும், பூஞ்சணங்களும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருமதி மேரி அந்தோணி சாமி சாண எரிவாயுக்கலத்தினை தமது திருமணத்திற்கு பிறகு தமக்கு கிடைத்த சிறந்த பரிசாக கருதுகிறார். "வயலுக்கு உரமும் ஆச்சு வீட்டு சமையலுக்கு கியாஸும் ஆச்சு இதுக்கு மேல என்னங்க வேணும்!" என்கிறார்.
'நல்ல ஆரோக்கியமான தோட்டத்துக்கு தேவை என்ன தெரியுமா? ரொம்ப சாண எரிவாயுக்கழிவுடன் கொஞ்சம் ஆன்மிகம்'
சாண எரிவாயுக்கழிவும் ஆன்மிகமும் நல்ல காம்பினேஷன்
திருநெல்வேலியிலேயே இன்னமும் சிறிது பயணிக்கலாம். பத்துமடை மகான் சிவானந்தர் பிறந்த கிராமம். அங்கு சுவாமிஜிகள் நடத்தும் சிவானந்த மிஷன் மருத்துவமனை உள்ளது. அங்குள்ள நோயாளிக்களுக்கான பேக்கரி முழுக்க முழுக்க சாண எரிவாயுவால் தயாராவதுடன், அங்குள்ள சாண எரிவாயு கழிவு நீர் மருத்துவமனைக்காக நடத்தப்படும் காய்கறித்தோட்டம் மற்றும் பண்ணைக்கு செல்கிறது. பண்ணைக்கான தலைமை விவசாயியும் துறவியுமான சுவாமி ஜகதீஷ்வரானந்தா நம்மை அந்த தென்னந்தோட்டங்களின் நிழலில் இருக்கும் அஸோலா படுகைகளின் ஊடே அழைத்துச் செல்கிறார். நோயாளிகளுக்கு அங்கு தங்கி சேவை செய்யும் மருத்துவர்களுக்கு முழுக்க முழுக்க உணவு இந்த இயற்கை முறைகளில் தான் உருவாகிறது.
'தாமரையானது ரோசா'
டோ னாவூர் ஃபெல்லோஷிப்பை சேர்ந்தவர் டாக்டர் ஜெரி. இங்கு விவேகானந்த கேந்திரம் சாண எரிவாயுக்கலனை நிறுவியது பெரிய கதை. "ப்ளாக் டெவலப்மெண்ட ஆபீசர் வந்து சொன்னப்ப வேண்டாம்னுடேங்க. அப்புறம் கேந்திரா ஊழியர் முனீஸ்வரன்தான் திரும்ப திரும்ப பயோகேஸ் சிறப்பை சொல்லிகிட்டே இருந்தாரு. சரி பார்ப்போம் அப்படீன்னுட்டு அவரை ஒரு ப்ளாண்ட் (plant) போட சொன்னேன். ஒரு நாலு க்யூபிக் மீட்டர் ப்ளாண்ட். அதிலருந்து திருப்திகரமாக கியாஸ் சமையலுக்கு வருது. அத்தோட கூட நல்லா ஸ்லரி(slurry) வருது. அதுவும் மண்புழு உரம் செய்ய ரொம்ப நல்லா இருந்தது..." இன்றைக்கு டோ னாவூர் ஃபெல்லோஷிப்பின் நான்கு (மொத்தம் 32 க்யூபிக் மீட்டர் கொள்ளளவு) சாண எரிவாயுகலன்களையும் விவேகானந்த கேந்திரம் நிர்மாணித்துள்ளது. அத்துடன் டோ னாவூர் பண்ணையின் விவசாயம் இன்று பஞ்சகவ்யம் சார்ந்து நடைபெறுகிறது. அங்குள்ள விவசாய பண்ணையின் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சொல்கிறார், "சாண எரிவாயு கழிவுல ஆரம்பிச்சு பஞ்சகவ்யம் செய்தோம். பஞ்சகவ்யம் போட்ட ரோசால்லாம் எப்படி இருக்குதுங்கிறீக! ஒவ்வொரு ரோசாவும் தாமரை மாதிரி பெரிசு!"
குமரி மாவட்டத்தில் மருங்கூர் முருகன் கோவிலில் இருந்து தோவாளை முருகன் கோவில் செல்லும் கிராம சாலையின் ஓரமாக அமைந்துள்ளது கோழிகோடுப்பொத்தை எனும் கிராமம். தலித் சமுதாயத்தைச் சார்ந்த விவசாயிகள் இங்கு உள்ளனர். அண்மைக்காலமாக தோவாளை பூச்சந்தையின் ஈர்ப்பு இங்கு பல விவசாயிகளை பூந்தோட்டம் (குறிப்பாக ரோசா, சம்பங்கி) போட வைத்துள்ளது. கூடவே அதீத இரசாயன உரங்களும் உள்ளிறங்கின. இந்நிலையில் பஞ்சகவ்யத்தை பயன்படுத்த முன்வந்தார் இக்கிராமத்தை சேர்ந்த திருமதி.தங்கம் என்னும் விவசாயி. அவரது ஒரு ஏக்கர் ரோசா தோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக பஞ்சகவ்யம் மட்டுமே தெளிக்கப்பட்டு வருகிறது. எவ்வித இரசாயன உள்ளீடும் இல்லை என்பதுடன் தோவாளை பூச்சந்தையில் அவரது ரோசாக்கள் தரத்திற்கு பெயர்வாங்கி நல்ல விலைக்கு போகின்றன. 2006 இல் இந்த கிராமத்தில் ஒரு சாண எரிவாயுகலன் நிறுவப்பட்டது. அந்த விவசாயி மிகவும் தயங்கித்தான் சம்மதித்தார். ஆனால் இன்று பலர் தங்கள் வீடுகளில் சாண எரிவாயு கலன் அமைக்கப் போட்டி போடுகின்றனர். இருவர் வீடுகளில் அவை நிறுவப்படுகின்றன.
விவேகானந்த கேந்திரத்தின் இந்த மீள்-ஆக்க எரிசக்தியுடன் இணைந்த விவசாய தொழில்நுட்பம் இன்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சுற்றுசூழலுக்கு இயைந்த ஆற்றல் தொழில் நுட்பங்களுக்காக அளிக்கப்படும் பரிசு ஆஷ்டன் பரிசு. இம்முறை அப்பரிசு பெற்ற சர்வதேச அமைப்புகளில் மீள்-ஆக்க எரிசக்தியுடன் இணைந்த விவசாய தொழில்நுட்ப சாதனைக்காக தமிழ்நாட்டின் விவேகானந்த கேந்திரம் பரிசு பெற்றது. இளவரசர் சார்ல்ஸ் இப்பரிசினை அளித்த போது அவ்ருக்கு தெரிந்திருக்குமா? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா என்கிற தஞ்சாவூர் தமிழரின் தொலைநோக்கு தொழில்நுட்ப பார்வையினால் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பத்தின் சாதனைக்கு தாம் பரிசு வழங்கினோம் என்பது?
"கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசையிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும்! மீனவர்கள் சக்கிலியர்கள் தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும்!...இந்தியாவை முன்னேற்ற விரும்பினால் நாம் இந்த மக்களுக்காக வேலை செய்தாகவேண்டும்...புராதன பாரத அன்னை மீண்டும் எழுந்துவிட்டாள். முன்னெப்போதையும் விட அரும் பெரும் மகிமைகளுடன் அவள் திகழ்கிறாள். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் அன்னையை உலகிற்கு பிரகடனப்படுத்துங்கள்"-சுவாமி விவேகானந்தர்
Friday, January 26, 2007
சந்திரனின் வடுக்கள் சொல்லும் கதை
சந்திரனின் பரப்பினை வரையுங்கள் என்றால் நமது மனதில் முதலில் வருவது அதன் வட்ட வட்ட பள்ளங்கள் கொண்ட நிலபரப்புதான். இந்த வட்ட வட்ட குழிகள்/பள்ளங்கள் எல்லாம்
விண்கல் தாக்குதலால் ஏற்பட்ட வடுக்கள். என்றால் நிலவினை விட பெரியதும் அதற்கு அருகிலேயே இருப்பதுமான பூமியின் மேல் ஏன் இத்தகைய வடுக்கள் இத்தனை அதிகமாக
காணப்படவில்லை? இருப்பதில் தெளிவான அத்தகைய விண்கல் வடு (crater) அரிஸோனாவில் உள்ளது. மிகவும் அரிதாக தெரியக்கூடியது என்பதால் அது ஒரு சர்வதேச சுற்றுலா அம்சமாகவே மாறிவிட்டது. ஒருவேளை பூமி ஏதாவது சக்தியால் காப்பாற்றப்பட்டுள்ளதோ? அப்படியெல்லாம் இல்லை. பூமியும் நிலவினைப் போலவே -ஏன் அதற்கு அதிகமாகக்கூட - விண்கற்களால் தாக்கப்படத்தான் செய்தது. (தாக்கப்படவும் செய்யும் - இனி வருங்காலத்தில்) ஆனால் பூமி அதன் சுற்றுக்கோளான சந்திரனை போல் அல்லாமல் நிலவியல் இயக்கங்கள் அதிகமாக உள்ள கிரகமாகும். இதன் விளைவாக விண்கற்களால் பூமியின் மேல்பரப்பில் ஏற்பட்ட வடுக்கள் நாளாவட்டத்தில் உருமாறி போய்விட்டன. என்ற போதிலும் நிலவியல் விஞ்ஞானிகள் (geologists) இதுவரை 170 கிரேட்டர்களை கண்டுப்பிடித்திருக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் பூமியில் விண்கல் மோதல் ஏற்படுத்தும் விளைவுகளின் தடயங்கள் அழிந்துவிட்டன. ஆனால் சந்திரனைப் பொறுத்தவரை அந்த விளைவுகளின் தடயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு நாஸா, இஸ்ரோ ஆகியவை தம் விண்வெளி ஆய்வின் பார்வையை சந்திரன் நோக்கி திருப்பியிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரகங்களை ஆராயும் விஞ்ஞானி பால் ஸ்பூடிஸ் (Paul Spudis) விளக்குகிறார், "பூமியும் சந்திரனும் சூரிய குடும்பத்தில் ஏறத்தாழ
ஒரே இடத்தை வகிப்பவை ஆகும். ஆனால் பூமியில் மறைந்து போன தடயங்கள் சந்திரனில் நிலைத்து உறைந்திருக்கும். இதனால் நெடுங்கால புவியியல் வரலாற்றின் கேள்விகள்
சிலவற்றுக்கு அவை விடை பகரக் கூடும். பூமியில் நிகழ்ந்த தொல் நிகழ்வுகளுக்கு ஒரு சாட்சியாகவே சந்திரன் விளங்குகிறது."
1970களில் பல சந்திர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்பல்லோ மிஷன்கள் 15, 16 மற்றும் 17 ஆகியவற்றில் சந்திரனின் உடைந்த பாறை சிதறல்களாலான பகுதிகளில் (அதனை
ரிகோலித்-regolith என்பார்கள்) துளையிட்டு அந்த துகள்கள் எடுக்கப்பட்டன. 2 மீட்டர் ஆழம் கொண்ட துளைகளிலிருந்து சேமிக்கப்பட்ட அந்த சந்திர துகள்களில் மிகவும்
ஆழத்திலிருந்து எடுக்கப்பட்டவை 2 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. பொதுவாக ரிகோலித் துகள்களில் சூரிய வீச்சின் (solar wind) தன்மைகள் பதிவாகியிருக்கும்.
மிகப்பழமையான ரிகோலித் துகள்கள் ஆராயப்பட்ட போது ஆதவ வீச்சின் தன்மை கூட 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இன்றிருப்பதைக் காட்டிலும் மாறுபட்டிருப்பது
தெரியவந்தது. ஆக, பூமியின் தொல்வரலாறு மட்டுமல்ல விண்மீன்களின் வளர்ச்சியின் தன்மையையும் இத்துகள்களை ஆராய்வது நமக்கு கோடிட்டு காட்டக்கூடும்.
புவியியலார்களுக்கு நிலவின் துகள் ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான ஈடுபாடு உண்டு. அது டைனோசார்களை அழித்ததாக கூறப்படும் விண்கல் மோதலின் பதிவுகள் சந்திரனிலும் இருக்கக் கூடுமா என்பது. சில அறிவியல் வல்லுநர்கள் ஒரு சிலிர்ப்பூட்டும் கோட்பாட்டினை முன்வைக்கிறார்கள். அது : நமது சூரியனுக்கு ஒரு இருள் ஜோடி இருக்கக் கூடும் என்றும் அதன் இயக்கத்தால் 260 இலட்சம் (260,00,000) ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமி (என்றால் அத்துடன் சந்திரனும்) இத்தகைய விண்கல் மோதல்களுக்கு உட்படுத்தப்படக்கூடும்: என்பதுதான் அந்த கருதுகோள். இந்த கருதுகோளின் உண்மையும் நிலாவின் மேல்பரப்பு துகள்களை ஆராய்வதால் உறுதிபடக்கூடும்.
இஸ்ரோவின் சந்திராயன் 2007-8 இல் நடக்க உள்ளது. அதுவும் நிலாவின் நிலப்பரப்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது.
- நன்றி: நாஸா
- சுட்டி: இங்கே
- இப்பதிவில் காணப்படும் புகைப்படங்களின் அதிக தெளிவான படங்களை மேல் கூறிய சுட்டியிலிருந்து தகவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Thursday, October 20, 2005
உயிரி எரிபொருள் : சாண எரிவாயுவுக்கு பதிலியாக -2
- உங்களுக்கு தெரியுமா?
பெட்ரோலிய எரிபொருளை பயன்படுத்துற வாகனத்தில நாம ஒரு வருசத்துக்கு 20000 கி.மீ. தூரம் பிரயாணம் செய்வோம்னு வைச்சுகிட்டா 5 டன் காற்றை மாசுபடுத்துறோங்க. கணக்கு போட்டு பார்த்துக்குங்க. பெட்ரோலியத்தை எரிபொருளாகக் கொண்ட மோட்டார் வாகனங்கள் மட்டும் ஒரு நாளைக்கு 1,37,000 தயாராகின்றன. ஒரு வருசத்துக்கு ஏறத்தாழ 5 கோடி மோட்டார் வாகனங்கள் அப்படீன்னு கேள்வி. எம்புட்டு நல்ல காத்து அம்போன்னு போவுது பார்த்துக்குங்க.
- உங்களுக்கு தெரியுமா?
பிலிப்பைன்ஸ் இருக்குதில்லீங்களா அங்கே 1970-களின் போது பெட்ரோலிய எரிபொருள் விலை எவரெஸ்ட் உயரத்துக்கு எகிறனதும், 68 பேருந்துகள் மணிலா நகரிலேயே தேங்காய் எண்ணெய் மூலம் 30 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிருக்காங்க.
சரி விசயத்துக்கு வருவோங்க.
ஜெத்ரோபா கற்காஸ் அப்படீன்னு தாவரவியல்-காரங்க சொல்ற காட்டாமணக்கு பயிர் செய்து அறுவடை செய்ய ஏற்றதாக உள்ள செடிங்க. ஏன் அப்படீன்னீங்கன்னா அதன் பின்வரும் குணாதிசயங்கதான் அத அப்படி ஆக்குதுங்க:
- வறட்சியை தாங்கி வளர்ற செடிங்க
- வெப்பமண்டலத்துக்கு ஏற்றதுங்க
- மழை குறைவா இருந்தாலும் சரி வானம் பொய்ச்சாலும் வளர்ந்துருங்க.
- மண் வளம் இல்லைன்னாலும் பரவாயில்லீங்க.
- மழை பெஞ்சு அந்த வெள்ளத்துனால ஏற்படற நில அரிப்பையும் தடுக்குங்க
- கால்நடைங்க காட்டாமணக்கை மேயப்போறதில்லீங்க.
சரி காட்டாமணக்கு வாழ்க்கை பத்தி சில விசயங்க:
- காட்டாமணக்கின் ஆயுட்காலம்: 50 ஆண்டுகள்
- உயரம்: 3-6 மீட்டர்
- பூக்கும் பருவம்: ஏப்ரல், ஆகஸ்டு
- அறுவடை: ஜூன், அக்டோ பர்
வானம் பார்த்த பயிராக ஹெக்டேருக்கு 2500 செடி நட்டீங்கன்னா (பொதுவா ஊடுபயிர் வச்சு செய்யிறது என்னைக்குமே நல்லதுங்க. ஏன்னா ஒற்றைப்பயிர் விவசாயம் அப்படீங்கறது பூச்சிங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கிற மாதிரிங்க.) 250 கிலோவில ஆரம்பிச்சு 6-ஆவது வருசம் 4000 க்க்கு போகும் அப்படீங்கறாங்க.
Monday, October 17, 2005
உயிரி எரிபொருள் : சாண எரிவாயுவுக்கு பதிலியாக -1
தேவையான அன்றாட சாணம் கிடைக்கும் நிலையில் இல்லை. மேலும் கால்நடைகள் விற்கப்பட வேண்டிய
தேவைகள் ஏற்படும் போது சாண-எரிவாயுகலன்கள் செயலிழந்து விடுவதும் நாம் காண்கிற ஒரு நிகழ்ச்சிதான்.
எனவே எண்ணெய் விதைகளிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்வதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நமக்கு மிகவும் பழக்கமான, சாகுபடியிலுள்ள, எளிதில் கிடைக்கக் கூடிய 42 எண்ணெய் விதைகள் (மற்றும்
பழக்கொட்டைகளை) இவ்வித (உயிரி-எரிவாயு உற்பத்தி) பயன்பாட்டிற்கு ஏற்றதாக ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளார்கள் [1]. பொதுவாகவே இத்தகைய விதை/கொட்டைகளில் 25 சதவிகித எண்ணெயும் மீதம்
சக்கைத்தன்மையும் உள்ளமையால் ஒரு குறிப்பிட்ட மரத்தையே நெடுக சாகுபடி செய்ய வேண்டிய (monoculture)
அவசியமில்லை. இப்போதைக்கு இவ்விதத்தில் ஆராய்ச்சிக்கு நன்றாக உட்படுத்த பட்டுள்ளவை:
வேப்பங்கொட்டைகள் (Azadirachata indica), புங்கம் (Pongamia pinnata) ஆமணக்கு (Ricinus communis)
காட்டாமணக்கு (Jatropha curcas) ஆகியவை.
ஒரு ஒப்பீட்டைக் காணலாம்: இது பேரா.சுப்பாராவ் et al அளிக்கும் ஆராய்ச்சி முடிவு
- உள்ளிடும் உலர்ந்த எடைக்கு ஈடாக கிடைக்கும் எரிவாயு கனஅளவு என்று பார்த்தால்:
சாண எரிவாயு:
கிலோவுக்கு 0.18 மீ3
ஆமணக்கு எரிவாயு: 0.4-0.5 மீ3 - மீத்தேன் வாயு (விழுக்காட்டளவில்)
சாண எரிவாயு: 55-60 %
ஆமணக்கு எரிவாயு: 70 % - தினசரி உள்ளீட்டளவு-(உலர் எடையளவு):
சாண எரிவாயு கலனுக்கு : 6-10 கிலோ
ஆமணக்கு எரிவாயுகலனுக்கு : 1.5 -2.0 கிலோ
[நன்றி:Prof.E.C.Subbarao et al., 'Biogas from Non-edible oil cakes', 'Tree Borne Oil seeds as a source of Energy for Decentralized planning' MNES, edited by Dr.P.Radhakrishna, Government of India]
நைட்ரஜன் இருக்கும் புரதமும் அதிக சதவிகிதத்தில் உள்ளது. உதாரணமாக வேப்பங்கொட்டையில் எண்ணெய் 20 சதவிகிதம் புரதம் 13-35 சதவிகிதம். காட்டாமணக்கில் எண்ணெய் 30-40 சதவிகிதம் புரதம் 38 சதவிகிதம்.கார்பன் எரிவாயுவிலும் கரியமிலவாயுவிலும் வெளியேறிவிடுவதால் பொதுவாக எரிவாயுவுக்கு பின்னர் ஏற்படும் கழிவில் உலர்-எடை அளவில் நைட்ரஜன் அடர்த்தி (concentration) அதிகரிக்கும். இதுவும் சாண-எரிவாயுக்கழிவினைக்
காட்டிலும் அதிகம். எனவே அவை நல்ல உரமாக பயன்படுத்தப்பட முடியும். [வளரும்]